மு.பொன்னம்பலம் 

Mu.Ponnambalam: Sri Lankam Tamil Writer.
அறிமுகம்

படைப்புகள்

  மின்னல் - கவிதை
  தரிசனம் - கவிதை
  மதிப்பீடு - கவிதை    

நூல் விமர்சனம்

  நோயில் இருத்தல்    

இணையத்தில் மு.பொ.


<< December 2003 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05 06
07 08 09 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:


rss feed


blogdrive


நோயில் இருத்தல் - நூல் விமர்சனம்

ஒப்புமைகளும் உருவகங்களும

நூல் விமர்சனம்
ஏ.ஜே.கனகரட்ணா (ஆங்கிலத்தில்)

நோயில் இருத்தல், மு.பொன்னம்பலம், 290 பக்கங்கள், குமரன் பதிப்பகம், சென்னை.


மு.பொன்னம்பலம் அவர்களின் இப்படைப்பின் நோக்கம், மிகப்பெரிதான வீச்சைக் கொண்டிருக்கவே விழைகிறது. 1984ஆம் ஆண்டு மயிலிட்டி காச நோய் மருத்துவமனையில் தாம் சிகிச்சை பெற்றதும், பிறகு 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் வெடித்த அந்த உக்கிரமான சூழலில், தம் நரம்புமண்டலம் பல்வேறு முனைகளில் பாதிக்கப்பட்டது தொடர்பாக யாழ் பொது மருத்துவமனையில் தாம் சிகிச்சை பெற்றுவந்ததும், தம்முடைய இந்தப் படைப்புக்கு உந்துதலாக, அடிநாதமாக இருந்தன என்று, மு.பொ, தம் முன்னுரையில், வெளிப்படையாகவே அறிவிக்கிறார். மேலும், கருவறையில் இருந்து வெளிவர முயலும் ஒரு தேசத்தின் பிரசவப்போராட்டத்தை, தம் படைப்பு குறிக்கிறது என்றும் அவர் முன்னுரையில் கூறுகிறார்.

இந்த நாவலைப் பலமுறை வாசித்த பிறகும் என்னுள் தொடரும் கேள்வி யாது? ஆசிரியர், தமதான நோய் என்ற அவஸ்தையை - அந்த அனுபவத்தை - இந்தத் தேசத்தின் கொந் தளிப்பான சோகத்தைக் குறிக்கப் பயன்படுத்துவதில் வெற்றிகண்டிருக்கிறாரா என்பதே என் கேள்வி. அதற்குப் பதில், ஆசிரியர் அதில் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதே.

ஒருபுறம் தம் நோய், மறுபுறம் தேசம் பிறக்கும் அவஸ்தை - ஆக இந்த இரு களங்களுக்கும் இடையில் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதை, ஆசிரியர், தம் கற்பனையை ஓரளவு நீட்டி, சுட்டிக்காட்டுகிறார். அதில் வெற்றியும் காண்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளலாம். குறிப்பாக, நாவலின் இரண்டாம் பகுதியில், தேசத்தின் வரலாறு சோகத்தில் அமிழ்ந்து விடுவதைச் சுட்டும் பொதுவான உவமையாக, உடலை வாட்டும் நோய் அமைவதைக் காணலாம்.

ஆசிரியரைப் பொறுத்தவரை, மலரத் துடிக்கும் இந்தத் தேசத்தைப் பீடித்திருக்கும் நோயின் இயல்புதான் என்ன? சுதந்திரமின்மைதான் அந்த இயல்பு என்கிறாரா அவர்? இந்த நோயின் இயல்பை வேறு பலர், பிறிதொன்றாகக் கணிக்கக் கூடும் என்பது முக்கி யம். தவிரவும், நாவலை ஒரு மொத்த உருவகமாகப் படைக்கும் நோக்கத்தை அவர் கொண்டிருந்தபோதும், அவர் காட்டும் இந்த ஒப்புமைகள், ஒன்றுக்கொன்று இணையாக மட்டுமே செல்கின்றன. அவை ஓர் உருவகமாக இணைந்து கலந்திருந்தால் மட்டுமே ஆசிரியரின் நோக்கம் நிறைவேறியிருக்கும் என்று கூறலாம்.

உருவக அடிப்படையில் அமைந்து வெற்றி பெறும் நாவலுக்கு எடுத்துக்காட்டாக, ஆல்பெர் காம்யுவின் கொள்ளைநோய் (The Plague) நாவலைக் கூறலாம். ஜெர்மானிய ஆக்கிரமிப் பில் சிக்கிய பிரெஞ்சுத் தேசத்தின் நிலையை விவரிப்பதில், அந்த ஆக்கிரமிப்பை எதிர்ப் பதற்கான தேவையை வலியுறுத்துவதில், காம்யுவின் நாவல் வெற்றி காண்கிறது. காரணம், அந்த நாவல், எதார்த்த விவரணைக்கும், தான் குறிக்க விரும்பும் பொருளுக்கு மிடையில், இடைவிடாத ஓர் ஊடாட்டத்தைக் கைக்கொள்வதே, என்பார் கிறிஸ்டோபர் பட்லர்.

வெவ்வேறான இரு பொருட்களை ஒப்புமை செய்வது, உவமை. இந்த இரண்டையும் இணைத்து ஒன்றாக்குவது, உருவகம்ன அதன் மூலம், படைப்பை, இரண்டு அல்லது அதற் கும் மேற்பட்ட மட்டங்களில் வாசிக்க முற்படுகிறது உருவகம். உண்மையில் உருவகம் என்பது, இலக்கிய உத்தி மட்டுமல்லன மதத்தை ஆதாரமாகக் கொண்டு எழுந்ததுன மிகப் பண்டைய காலத்தியது. எனவே, உருவகத்தை, ஒரு வெளிப்பாட்டு முறையாக, பொருட் களைக் கண்டுணரும் வழிமுறையாக, அத்தகைய வாழ்க்கைமுறையாக, மனிதகுலத்தின் பொதுப்படை அம்சமாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தொன்மங்கள் பொதுவாக உரு வக அடிப்படை கொண்டவையேன உலகார்ந்த பொதுப்படை உண்மைகளை, உந்துசக்தி களை விளக்குவதே அவற்றின் முயற்சி எனலாம் (காண்க - இலக்கியப் பதங்கள், கோட் பாடுகள் பற்றிய பெங்குவின் அகராதி, ஜே ஏ கட்டன் அவர்களின் புதிய பதிப்பு).

நோயில் இருத்தல் நாவலின் முதல் பகுதி, மயிலிட்டி காச நோய் மருத்துவமனையைப் பின்புலமாகக்கொண்டு 178 பக்கங்கள்வரை நீள்கிறது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைபெறுவோர் பற்றிய கறாரான குறுஞ்சித்திரங்களை எழுதுவதாகவும், தத்துவார்த்தப் பிரச்சினைகளை எழுப்புவதாகவும், இப்பகுதி மாறி மாறிச் செல்கிறது. ஒருசில வாசகர்களின் பொறுமையைச் சோதிப்பதாக இது அமையலாம். ஆனால் இப்படி உணரும் வாசகர்கள் ஒன்றை நினைவில் இருத்தினால் நலம் - அதாவது, படைப்பை நாம் வாசிக்கும் அதே நேரத்தில் படைப்பும் நம்மை வாசிக்கிறதுன வாசகர்கள் மற்றும் மனிதர்கள் என்ற இரு மட்டங்களிலும் நம்முடைய குறைபாடுகளையும், நமக்குப் புலப்படாமல்போகும் விஷயங்களையும் படைப்பு வெளிக்காட்டுகிறது என்பதை இவர்கள் கவனிக்க வேண்டும்.

நாவலின் முதல் பகுதி, இரண்டாம் பகுதியைக் காட்டிலும் நிதானமாகச் செல்கிறது. மேலும் நாவலை முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் பாத்திரத்தின் உடல் நலமும், முதல் பகுதியில், இரண்டாம் பகுதி அளவு, மோசமடைந்து விட்டிருக்கவில்லை. எனவே அவர், முதல் பகுதியில், ஆத்மார்த்தப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளில் அதிகம் மும்முரம் காட்டமுடிகிறது.

ஆத்மார்த்தப் பிரச்சினைகள் என்று வரும்போது, மேற்கத்திய சிந்தனாமுறையை மூடத் தனம் என்று கருதும் ஒருவித ஆன்மிக மாயாவாதம் பக்கம் சாரும் நிலையை ஆசிரியர் மேற்கொள்கிறார். அவருடைய இந்த நிலைப்பாட்டுடன் என்னால் முழுமையாக ஒத்துப் போகமுடியவில்லை என்றாலும்கூட, அவருடைய சிந்தனையானது அவர் வளர்ந்த முறை, குறிப்பாக அவருடைய அன்னையார் அவர்மீது செலுத்திய தாக்கம் ஆகியவற்றின் பாற்பட்டது என்று நான் புரிந்துகொள்கிறேன். மேலும், ஆன்மிக அனுபவத்தை ஒரேயடியாக நிராகரிக்க நான் தயாரில்லை. பல்வித ஆன்மிக அனுபவங்கள் என்ற வில்லியம் ஜேம்ஸின் மலை வாசித்த யார்தான் அப்படி நிராகரிப்பார்கள்! ஆயினும், அறிவார்ந்த சிந்தனாமுறைகளின் தாக்கம் பெற்று, கடவுள் இருப்புக் குறித்து சந்தேகம் கொள்ளும் மனிதனாகவே நான் நீடிக்கிறேன்.

ஆசிரியரைப் பொறுத்தவரை, தம் தத்துவார்த்த அளவுகோல்களை, அகநோக்கு - புற நோக்கு என்பதாக வரையறுத்துக் கொள்கிறார்ன இவற்றை இரு துருவங்களாக, ஒன்றை யன்று தவிர்த்துச் செயல்படுவனவாக, ஆக்குகிறார் எனலாம். உண்மையில், இவை, ஒன்றுக்கொன்று மாற்றாக, இயங்கியல்ரீதியில் செயல்படுவன. ஆசிரியரோ, புற நோக்கு என்பதை ஒரு துருவமாக்கி, அதை வெறுக்கிறார்ன அக நோக்கை இன்னொரு துருவமாகப் புகழ்கிறார். மார்க்ஸ் சிந்தனைகள், மார்க்சியம் ஆகியவையும் இங்கே புற நோக்குகளாக மட்டுமே வரையறை பெறுகின்றன. 'மதம் மக்களுக்கான போதை மருந்து' என்ற மார்க் ஸின் வாசகம், கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அதற்கு அடுத்த வாசகமாக, மார்க்ஸ் 'இதயமற்ற உலகின் இதயம், மதம்' என்று எழுதியிருப்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள்! இந்த நாவலின் ஆசிரியரும் இதை மறந்திருப்பது, விந்தையே! மனித குலத்தை ரட்சிக்க வந்தவர்களின் வரிசையில் கடைசியில் வருபவர் மார்க்ஸ் என்று ஆர்.ஹெச் டானி குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடுவதில், மார்க்ஸ் எழுப்பும் முழக்கங்கள், பழைய ஏற்பாடு நூலில் காணப்படும் ரட்சக வாசகங்களை ஒத்துள்ளன என்றும், அங்ஙனம் யூத இன ரட்சக மரபில் மார்க்ஸையும் நிச்சயம் இனங்காண முடியும் என்றும் வேறு பலரும் கூறுகிறார்கள்.

ஆம், மார்க்ஸ் நாத்திகவாதத்தைப் பிரக்ஞாளூர்வமாக ஏற்றுப் பேசினார்தான். அவர் காலத்திய நிறுவனமயமான மதம், சமத்துவமற்ற ஒரு சமுதாய அமைப்புக்கு முட்டுக் கொடுத்து வந்தது, அந்த அமைப்பு கடவுளால், மேலுலகால் விதிக்கப்பட்டது என்று நியாயப்படுத்த முற்பட்டது என்கிற மறுக்கமுடியாத வரலாற்று உண்மையே, அதற்குக் காரணம். ஆனால் பிற்கால நிகழ்வுகள், குறிப்பாக, விடுதலை இறையியலின் எழுச்சி போன்ற நிகழ்வுகள், மார்க்சியத்துக்கும் கிறித்துவத்துக்கும் ஒருவித இணக்கப்பாடு, நெருக்கம் சாத்தியம் என்பதைக் காட்டுகின்றன (ஆனால் அந்த நல்லுறவுச் சாத்தியத்தை வத்திக்கான் மத நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்பது வேறு விஷயம்).

பொதுவான தத்துவார்த்தப் பிரச்சினைகளைத் தாண்டி, ஆசிரியர், ஆல்டஸ் ஹக்ஸ்லியின் "உணர்வின் கதவுகள்" நூல் குறித்தும் தொட்டுச் செல்கிறார். அந்நூலில் விவரிக்கப்படும் போதைமருந்து உட்கொள்வது குறித்த அனுபவம் மனத்தை எவ்வளவோ அலைக்கழித்து, எங்கோ இட்டுச்செல்வதாக இருக்கலாம் என்றபோதும், அதை ஆசிரியர் செய்வதுபோல மாயாவாதிகளின் அனுபூதி-அனுபவத்துடன் ஒப்பிடமுடியும் என்பது எனக்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது! ஆனால், சார்த்தர்கூட போதைமருந்தை உட்கொண்டு பரிசோதனை செய்துபார்த்தார், அந்த அனுபவத்தால் அருவருப்படைந்தார் என்பது எனக்குப் புதிய செய்திதான்.

தவிர, நாவலில் ஆசிரியர், ஒல்லாந்தர் காலத்தில் சங்கிலி மன்னன் ஆண்டான் என்றும், கிறித்துவ மதத்துக்கு மாறிய, ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட சாதி மக்களை அவன் கொன்றான் என்றும், குறிப்பிடுகிறார். அவர் கூறுவது, போர்த்துக்கீயர் காலத்தில் ஆட்சி புரிந்து, மன்னார் பகுதியில் தியாகிகளான அந்தக் கிறித்தவர்களைக் கொன்ற சங்கிலி மன்னனாக இருக்கலாம்.

வரலாறு என்று வரும்போது இன்னுமொரு விஷயம் - இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிக்கு எதிரான திருப்பம் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? ஸ்டாலின்கிராட் நகரை ரஷ்ய மக்கள் காக்க முற்பட்டபோது, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செய்வதாகக் கூறிய உதவி வராமல் போனதுன அப்போதும் ரஷ்ய மக்கள் வீரத்துடன் போரிட்டார்கள், அதுதான் ஜெர்மனியின் தோல்விக்கான முக்கிய திருப்பம் என்று ஸ்டாலின்கிராட் போர் மலில் அலெக்ஸாண்டர் வெர்த் செய்துள்ள விவரிப்பை வாசித்த பிறகு எனக்குத் தெரிய வந்தது. இத்தனைக்கும் அலெக்ஸாண்டர் வெர்த் "லண்டன் டைம்ஸ்" இதழின் அயல் நாட்டு நிருபர், மாஸ்கோ நகரில் வசித்தவரான போல்ஷெவிக் அனுதாபி ஒன்றும் அல்லர்.

ஆனால், இத்தகைய சாதாரண விளக்கங்களால் "நோயில் இருத்தல்" நாவலின் ஆசிரியர் திருப்தி அடைவதில்லை போலும்! "ஹொரே~¢யோ, உன் தத்துவம் காணும் கனவை விடவும், பிரார்த்தனையே அதிகம் சாதிக்கும்" என்ற வாசகத்தை நம்புபவர் அவர். எனவே, தம் நாவலின் 17ஆம் பக்கத்தில், ஒரு விஷயத்தை வெளியிடுகிறார்: அதாவது, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் தாம் நுழைய ஹிட்லர் நாள் குறித்து விட்டிருந்தார்ன அதற்கு இரண்டு தினங்கள் முன்பாக ஹிட்லரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன், யோகி அரவிந்தர் "உளவியல் குண்டுமழை" ஒன்றைப் பொழிந்ததால் ஹிட்லரின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது, இல்லையென்றால் ஹிட்லரின் காலடியில் பிரிட்டன் வீழ்ந்திருக்கும் என்று கூறுகிறார் ஆசிரியர்! இதை அவர் முழுமையாக நம்புகிறார், நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிக் கூறவில்லை என்று தெரிகிறது.

ஹிட்லர் அதிகார வெறியர்ன அதிகார வெறியும், எதிரிகள் பற்றிய அச்சமும் தலைக்கேறிய நிலையில், ஜெர்மானியத் தளபதிகளை விடவும் தம்முடைய சோதிடர்களையே அவர் நம்பிப் பின்பற்ற முற்பட்டார் என்று வரலாற்றுப் பார்வைகள் கூறுகின்றன. ஹிட்லர் இப்படி சோதிடர்களின் வழிநடத்தலில் செல்வதை அறிந்திருந்த நேச நாடுக@ம், களத்தில் அவருடைய காய்-நகர்த்தல்கள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்காகவே, சோதிடர் களின் சிந்தனா மையம் ஒன்றையும் நிறுவியிருந்தார்கள்! எது எப்படியாயினும், இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்கள் சோதிடர்களே ஒழிய, படையினர் அல்லர் என்பது, வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகும்.

மேலும், ரஷ்யா மீது ஆக்கிரமிப்பு நடத்த வேண்டாம் என்று தம்முடைய தளபதிகள் கூறிய ஆலோசனையைப் புறந்தள்ளிய ஹிட்லர், ஆக்கிரமிப்பு நடத்தலாம் என்று சோதிடர்கள் கூறியதை ஏற்றார். இந்த முடிவு, உலகை வெல்ல வேண்டும் என்ற அவருடைய நோக்கத்துக்கு எமனாக அமைந்துவிட்டது. குளிர்காலத்தின் தாக்கமும், ரஷ்ய மக்களின், மற்றும் செம்படையின் வீரமும் ஒன்றுசேர்ந்து, அவருடைய தீய திட்டங்களை சுக்கு மறாக்கிவிட்டன. இதுபற்றிய பல்வேறு விளக்கங்கள் குறித்து நான் இங்கு அதிகம் கூற விரும்பவில்லை. காரணம், எந்த விளக்கமும், அதைத் தர முற்படுபவரின் சார்புநிலையை ஒட்டியே இறுதியில் அமையும். தவிர, வரலாற்று 'உண்மைகள' என்று கருதப்படுபவை, வழக்கமாக, தாம் சார்ந்துள்ள சித்தாந்தங்களை வெளிக்காட்டுவதில்லை. 'உண்மை' என்று வழங்கப்படுவதும்கூட, நிஜத்தில், தான் சார்ந்துள்ள சித்தாந்தத்தை ஒட்டியே தீர் மானிக்கப்படும்.

"நோயில் இருத்தல்" முதல் பகுதி, நாவலை முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் பாத்திரம், வெளியை வெறித்துப் பார்ப்பதாகத் துவங்குகிறது. நாவலின் இரண்டாம் பகுதியோ - யாழ் மருத்துவமனை, பதினெட்டாம் வார்ட். அந்த வார்டில், சுவரை ஒட்டிய படுக்கையில் அவன் படுத்திருந்தான் என்று, சட்டென்று, வர்ணிப்பாகச் சுழன்று தொடங்குகிறது. ஒருபுறம் நரம்புமண்டலம் பல்வேறு முனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளியின் நிலைமை, மறுபுறம் ¦~ல்லடித்துக்கொண்டு களத்தில் முன்னேறி வரும் இந்திய அமைதிகாக்கும் படை என்று மாறிமாறிச் செல்லும் விறுவிறுப்பான வர்ணிப்பு. அந்த உக்கிரமான சூழலைச் சுட்டும் வர்ணிப்பு. இது எப்படி முடிகிறது? ஒருபுறம், உயிர் பிழைக்க, பஸ் வாகனம் மற்றும் படகில் தப்பிச்செல்லும் மக்கள் - அவர்களில் ஆசிரியரும் ஒருவர்ன மறுபுறம், அவர்களைத் துரத்தித் தொடர்ந்து குண்டுவீச முற்படும் இந்திய அமைதிகாக்கும் படையின் ஹெலிகொப்டர். அந்த மக்களுக்கு வாழ்வா, சாவா என்ற துரத்தல், போராட்டமாக நாவலின் இரண்டாம் பகுதி உச்சக்கட்டத்தை எட்டுகிறது. நான் இங்கு எனதாக முன்வைத்த குழப்பங்களையும் மீறி, தீவிரத்தன்மைகொண்டு இயங்கும் இந்த இலக்கியப் படைப்புக்கு ஏற்ற, மிக பரபரப்பான முடிவே, இது.


மு.பொ @ 12/21/2003   Make a comment                                            முகப்பு